🌀 படிப்பினை தரும் சம்பவம் – 03

Story

அதிகமா இருந்தாலும் வரி வரியாக இதனை வாசியுங்கள்!
உங்களை சுற்றியும் ஒருநாள் இது நிகழலாம்!

நீங்களோ உங்கள் பிள்ளைகளோ 👇இதுபோன்ற சீரளிவுகளில் சிக்கி தவிக்காமலும், ஆபத்துகளில் அகப்பட்டுக் கொள்ளாமலும் அவதானத்துடனும், அறிவுடனும் தப்பித்துக்கொள்வதற்கான (உண்மை சம்பவத்தின்) முன்னெச்சரிக்கை பதிவாகும்.

(இங்கே பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

சேர், உங்களோட கொஞ்சம் பேசணும்!
கோள் பண்ணவா?

என்ன கேஸ் ?

எங்க தாத்தா ஒன்னு மிஸ்ஸிங்க்!
அதபத்தி நியூஸ் போடணும்.

நீங்க எந்த இடம்?
எப்பொ இருந்து அவங்க மிஸ்ஸிங்க்?
அவங்க மெரீட்டா?
பொலிஸ் என்றி போட்டிங்களா?
———

அழைப்பெடுத்தோம்!
அங்கே குழந்தை ஒன்றின் அழுகுரல்!

பெண் ஒருவர் நடந்த சம்பவத்தை படபடவென சொல்லிக்கொண்டே போனார்.

நிறுத்துங்கள், முதலில் இந்த குழந்தை ஏன் அழுகிறது? அதை சரிசெய்து விட்டு மறுபடி கோள் பண்ணுங்கள் என்றோம்.

இல்லை சேர், அது எங்க தாத்தாட குழந்ததான், அவங்கதான் காணாம போயிட்டாங்க, போன வெள்ளிக்கிழமை இருந்து காணொம்.

விபரமாக விசாரித்தோம்.

4 வயது ஆண் குழந்தை!
தாயை பிரிந்து 3 நாட்களாக அழுகிறது.

வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை!

இதை #அல்மசூறாவில் போட்டு தேடித்தாருங்கள் என்று அந்த சகோதரி கண்கலங்கினார்.

பாடசாலை சென்று, அல்லது பாடத்திற்கு சென்று, அல்லது வேலைக்கு சென்று திரும்பும் வழியில் ஒரு சிறுமி அல்லது இளம் பெண் காணாமல் போயிருந்தால் அது கடத்தப்பட்டிருக்கலாம், அல்லது வேறு ஏதாவது அனர்த்தத்திற்கு ஆளாகியிருக்கலாம் என்று அதனை செய்தியாக செயார் செய்ய முடியும்.

ஆனால் திட்டமிட்டு வீட்டிலிருந்து கிளம்பி சென்ற ஒரு பெண்ணை “காணவில்லை” என்று எப்படி பதிவிடுவது?

நடந்தது என்ன?👇👇

சஸ்னா! வயது 35, நான்கு வயது ஆண் குழந்தை மற்றும் 9, 12 வயது பெண் குழந்தைகளின் தாய். நல்ல சம்பாத்தியம், நல்ல குடும்பத்தை சேர்ந்த இவளது கணவர் வெளிநாட்டில்.

இரு அடுக்குமாடி கொண்ட தனி வீடுகட்டி தேவையான பொருட்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்து எல்லா வசதிகளுடனும் சஸ்னா மற்றும் பிள்ளைகளை மகிழ்வுற வாழவைத்து கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு மாதமும் தவறாமல் பணம் அனுப்பி வருவதுடன் 6 மாதங்களுக்கு ஒரு முறை அங்கிருந்து பால்மா, எண்ணை, ஸ்வீற்ட்ஸ், ஆடைகள் என ஏராளமான பொருட்களையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

2 வருடங்களுக்கு ஒரு முறை அவர் நாடு வந்து செல்வார். பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் மகிழ்வோடு இருப்பார்.

மனைவி, பிள்ளைகளது பாதுகாப்பு கருதி சஸ்னாவின் உம்மாவுடைய வீட்டின் அருகிலேயே மேற்படி அழகிய வீடும் கட்டி அதனை சுற்றி CCTV கமராக்களும் பொருத்தியிருந்தார்.

சொல்லப்போனால் சஸ்னாவுக்கு எவ்வித குறையுமில்லை, பயமும் இல்லை, செழிப்பாக வாழ்ந்தாள்.

சஸ்னாவுடைய வீட்டின் முன்னால் ஒரு வெற்றுக்காணி!
விற்பனைக்கு போடப்பட்டிருந்தது.

பிரச்சினை அங்கிருந்துதான் ஆரம்பமானது!👇👇

வெளியூரை சேர்ந்த சிறிய குடும்பம் ஒன்று அந்த காணியை வாங்கி அதில் சிறிதாக ஒரு (தகர) குடிசை கட்டி குடியேறியது.

அதில் வயதான ஒரு தாயும், ஒரு மகனுமே இருந்தனர்.

அந்த தாயின் மூத்த மகன் வெளிநாட்டில், அவரது பணத்திலேயே இக்காணி வாங்கப்பட்டது.

கூட இருக்கும் மகன் பெயர் #ரிஸ்வான் வயது 23, மத்ரஸா ஒன்றில் ஓதிவிட்டு (ஹாபிஸ்) இப்போது தாயுடன் வசிக்கிறார்.

வெளிநாட்டில் இருக்கும் சகோதரன் வாங்கி கொடுத்த #திறிவீலர் ஓட்டுவதும் உம்மாவுக்கு உதவியாக இருப்பதுமே ரிஸ்வானின் வேலை.

சஸ்னாவுடன் அந்த வயதான தாய் பழக்கமானார், இதனால் சஸ்னா அவ்வப்போது நிறைய பொருட்கள் வழங்கி அவர்களுக்கு உதவி செய்தாள்.

முன் வீட்டிலும் ஒரு குடும்பம் குடி வந்திருப்பதால் சஸ்னாவுக்கு இப்போது இரவிலும் பயமில்லை. பகலிலும் அவர்கள் இவளுக்கு உதவியாக இருந்தனர்.

கணவன் அனுப்பும் பணத்தை எடுப்பதற்காக சஸ்னா #ரிஸ்வானின் ஆட்டோவில் பயமின்றி சென்று வந்தாள். அதுபோன்றே அவசர தேவைகளுக்கும் ரிஸ்வானும், தாயும் இவளுக்கு பெரும் உதவியாக இருந்தார்கள்.

இந்நிலையில்தான் ஒரு நாள் திடீரென #சஸ்னா காணாமல் போனாள்.

அது வெள்ளிக்கிழமை மதியம்!
ஜும்மா நேரம்!

அன்று உம்மாவின் வீட்டிலேயே சமையல்!
(வெள்ளிக்கிழமைகளில் உம்மாவின் வீட்டிலேயே சமைத்து உண்பது வழக்கம்)

நான் குளித்து விட்டு வருகிறேன், பிள்ளைகளுக்கு சாப்பாடு வைத்து கொடுங்கள் என்று கூறிவிட்டு சஸ்னா அருகில் இருக்கும் தன் வீட்டுக்கு வந்தாள்.

2 மணியாகியும் சஸ்னா சாப்பிட வரவில்லை!

சஸ்னாவின் தாய், சஸ்னாவின் மூத்த பிள்ளையை அனுப்பி உம்மாவை சாப்பிட கூட்டி வருமாறு அனுப்பினார்.

வீடு திறந்தபடியே கிடந்தது, உம்மாவை காணவில்லை.

உடனே உம்மம்மாவிடம் சென்று பிள்ளை விபரத்தை கூறியது.

தாய்க்கு நெஞ்சு படபடத்தது.

எல்லோரும் ஓடி வந்து திரும்பவும் தேடினார்கள் சஸ்னா இல்லை, அக்கம், பக்கம் எல்லா இடமும் தேடினார்கள் சஸ்னா இல்லை.

அவளது மொபைலுக்கும் கோள் எடுத்தார்கள், போன் சுவிட்ச் ஓப்.

பதட்டம் மேலும் அதிகரித்தது.

பதட்டத்துடன் சொந்தபந்தம் எல்லோருக்கும் கோள் எடுத்து விசாரித்தார்கள்.

சஸ்னா எங்கும் இல்லை.

வெள்ளிக்கிழமை மதிய நேரம், வீடு மரண வீடு போன்று சஞ்சலமாக மாறியது.

உடனே சஸ்னாவின் கணவருக்கும் தகவல் சொல்லப்பட்டது.

அவர் CCTV கமெராவை பரிசோதித்தார், அது ஏற்கனவே ஓப் செய்யப்பட்டிருந்தது.

இப்போது அவரும் பதறினார், தெரிந்த இடத்திற்கெல்லாம் அவரும் அறிவித்தார்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு அயலூர்களுக்கும் சென்று தேடுவோம் என்று முடிவெடுத்து தேட ஆரம்பித்தார்கள்.

உதவிக்கு முன்வீட்டு ரிஸ்வானின் திறிவீலரை கேட்டார்கள், ரிஸ்வான் பஸாருக்கு சென்றதாக தாய் சொன்னாள்.

ரிஸ்வானுக்கு போன் செய்தார்கள், ரிஸ்வான் தன் நண்பன் ஒருவருடன் தூரத்து பயணம் ஒன்றில் இருப்பதாக கூறினான்.

இதனால் வேறு ஆட்டோ ஒன்றில் நாலா பக்கமும் தேட ஆரம்பித்தார்கள்.

மாலையானது, சஸ்னா பற்றி எந்த தகவலும் இல்லை.

மறுநாள் பொழுது விடிந்தது, மீண்டும் தேடும் படலம் ஆரம்பமானது.

ரிஸ்வானும் வீடு வந்தான், சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவனும் பெரும் கவலையோடு தேடும் முயற்சியில் இறங்கினான்.

ரிஸ்வானின் ஆட்டோவில் அயலூர் கிராமம், பஸார், காடு, மலை எல்லா இடமும் தேடினார்கள், சஸ்னா இல்லவே இல்லை.

இந்நிலையில்தான் 👇👇
நமக்கு கோள் எடுத்தாள் சஸ்னாவின் சகோதரி!

அழுது புலம்புகின்ற குழந்தைக்காகவேனும் நம்மால் முடிந்த உதவியை பண்ணாலாமென்று இதை பகிரங்கப்படுத்தாமல் ரகசியமாக தேடி உதவும் முயற்சியை நாமும் மேற்கொண்டோம்.

மறுநாள் தகவல் கிடைத்தது!

காணாமல் போன பெண் சுமார் 60-70 கிலோமீட்டர் தூரத்துக்கப்பால் உள்ள வேறொரு ஊரில் இளைஞர் ஒருவரால் அழைத்து செல்லப்பட்டு மறைவாக அங்கு தங்கவைக்கப் பட்டிருப்பதாக செய்தி வந்தது.

அழைத்து சென்ற இளைஞருடன் திருமணம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டபோது பெண் தங்கியிருக்கும் ஊரின் பள்ளிவாசல் நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு இந்த ரகசிய திருமணத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்திருப்பதாகவும் அறிந்தோம்.

யார் அந்த இளைஞன்??
ஏன் அழைத்து சென்றான்?
அங்குதான் அதிர்ச்சியே காத்திருந்தது.👇👇

அந்த இளைஞன் வேறு யாருமில்லை!
முன் வீட்டு #ரிஸ்வான்

பெண் குழந்தை ஒன்றை கொலை செய்து விட்டு பொதுமக்களுடன் இணைந்து தேடிய குற்றவாளியின் (அழுத்கம) சம்பவம் போன்று இங்கேயும் ஒரு பெண்ணை அயலூரில் ஒளித்து வைத்து விட்டு குடும்பத்தோடு சேர்ந்து அவனும் தேடிய சம்பவம் இது.

சஸ்னாவின் கணவர் உட்பட குடும்பமே உறைந்து போனது!

24 மணி நேரமும் #CCTV கமெரா கண்காணிக்கும் போது எப்படி சஸ்னா தவறான பாதையில் காலடி வைத்தாள்?

இதுதான் நடந்தது👇👇

சஸ்னா வீட்டு வேலைகளை முடித்து விட்டு எப்போதும் ஜன்னலோரம் அமர்ந்துகொண்டு #போன் பார்வையிடுவாள்.

ஜன்னலுக்கு சரி நேராக முன்வீட்டு ரிஸ்வானின் புட்டுவம்.

இவள் ஜன்னல் ஊடாக வெளியே பார்க்கும் பொழுதெல்லாம் அவன் முகமே முன்னால் தெரிந்தது.

அடிக்கடி அவன் பார்வை இவளிலும், இவள் பார்வை அவனிலுமாக விழத்தொடங்கியது.

ரிஸ்வானுடன் ஆட்டோவில் பயணிக்கும் போதும் அவள் வெளிப்படையாக பேச வெட்கப்பட்டாள், அவனும் வெட்கப்பட்டான் ஆனாலும் பார்வைகள் படு பலமாக இருந்தது..

அந்த பார்வையே கடையில் #வசியமாக மாறியது. வாழ்க்கைக்கு உலை வைத்தது.

மனோதத்துவ உளவியலில் ஒரு அம்சம் உண்டு,
“ஒன்றுக்கு நேரெதிர் எது இருக்கிறதோ அது அதற்கு வசியப்படும்” என்பதாகும்.

உதாரணமாக, ஒரு வெட்ட வெளியில் ஒரு பாகற்கொடி ஒன்றை நட்டு அதனருகே ஒரு கம்பை நட்டாலும் சரி, ஈர்க்குமாறை வைத்தாலும் சரி, செருப்பை வைத்தாலும் சரி..

அந்த கொடி அதன் அருகில் எது இருக்கிறதோ அதன் மேல்தான் சுற்றி படரும், பின்னிப்பிணையும்.

ஆண், பெண் உறவு உளவியலும் இது போன்றதுதான்!

ஒரு பெண்ணின் கண்முன்னே அடிக்கடி தென்படும் ஒருவன் மீது அவள் வசியமாகி விடுவாள், ஆணும் அவ்வாறேதான், ஆனால் ஆண்களை விடவும் பெண்களே மிக இலகுவில் இதற்கு வசியப்படுகின்றனர்.

அது, கருப்பா, வெள்ளையா, குட்டையா, நெட்டையா, அழகா, அசிங்கமா, தொழில் உள்ளவரா, வெறும் பொறம்போக்கா, வயதானவரா, இளைஞரா என்றெல்லாம் பார்ப்பதில்லை.

சஸ்னாவுக்கும் அதுவேதான் நடந்தது.
கண்ணெதிரில் எந்நேரமும் தென்பட்ட ஒருவனுக்கு அவள் எடிக்ட் ஆனாள். அவனும் அவளுக்கு எடிக்ட் ஆனான்.

ஆனால் வீட்டுக்குள் செல்ல முடியாது!
காரணம் CCTV கமெரா!

அதனால் #வங்கி தேவைக்கு அல்லது ஆஸ்பத்திரி போன்ற அவசிய தேவைகளுக்கு மட்டுமே #ரிஸ்வானுடன் அவள் ஆட்டோவில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

நாட்கள் நகர நகர பார்வைகள் நெருங்கியது. உறவு உரமாகியது, பகல், இரவு எப்போதும் சஸ்னா ஜன்னலோரமே நிலைகுற்றி நின்றாள்.

இதனால் தன் பிள்ளைகளை கவனிப்பதிலும், பராமரிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் அவள் கவனம் இழந்தாள்.

அதிகாலை 3 மணி தாண்டியும் விழித்திருந்தாள், ஏதோ ஒன்றை இழந்ததுபோல் எந்நேரமும் யோசித்தாள்.

இனியும் அவளாலும், அவனாலும் வெறும் பார்வகளோடு மட்டும் பொறுத்திருக்க முடியவில்லை.

இருவரும் திட்டமிட்டனர்.

கணவனிடமிருந்து இம்மாத காசு வரும்
வங்கி செல்ல முடியும், அப்போது அவனுடன் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டுமென இவள் தீர்மானித்தாள்.

புதன் கிழமை காசு வந்தது, ரிஸ்வானின் ஆட்டோவில் ஏறினாள், அவள் குமுறலை அவனிடம் கொட்டினாள், அவனும் அதே நிலைப்பாட்டில் இருந்தான்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை!
எங்காவது சென்றுவிட வேண்டுமென இருவரும் தீர்மானித்தனர்.

வெள்ளியன்று வீட்டை விட்டு வெளியேறுவதற்கான அத்தனை தயார்படுத்தலையும் வியாழன் இரவோடு இரவாக செய்து முடித்தாள்.

வெள்ளிக்கிழமை ஜும்மா நேரம், ஆண்கள் அனைவரும் பள்ளி சென்று விடுவார்கள், அதனால் வீதியில் சனநெரிசல் இருக்காது. இலகுவில் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

உடுப்பு ரெடி, காசு, நகை, போன் எல்லாமே ரெடி. ரிஸ்வானுக்கு சமிஞ்சை செய்தாள்.

இப்போது கமெரா ஓப், நேரம் நண்பகல் 12.50

CCTV கமெறாவின் மெயின் சுவிட்சை ஓப் செய்தாள்.

எல்லோரும் ஜும்மாவிற்கு சென்றுவிட்ட நேரம்.

ஓடிச்சென்று ரிஸ்வானின் ஆட்டோவில் ஏறினாள்.
பறந்தது ஆட்டோ.

சஸ்னா இபோது வேறொரு ஊரில் ரிஸ்வானின் உறவுக்கார குடும்பமொன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கிறாள்.

குறித்த ஏரியாவின் பள்ளிவாசலுக்கு இந்த செய்தி எட்டியதும் திருமணத்திற்கு தற்காலிக தடை விதித்தனர்.

சம்பவத்தை அறிந்த ரிஸ்வானின் குடும்பமும் கொதித்தெழுந்தது.

3 பிள்ளைகளின் தாய்க்கு 23 வயதான இவனை எப்படி மணமுடித்துக் கொடுக்க முடியும்? என்று பள்ளிவாசலில் முறையிட்டனர்.

ரிஸ்வான் மத்ரஸாவில் ஓதி முடித்தவன், ஆனாலும் மொடேனாக உடுத்து பேஸ்புக்கிலும், வட்சப்பிலும் போட்டோஸ் போட்டு “கலர்ஸ்” காட்டும் பொழுது போக்கு கொண்டவன்.

இந்த லட்சணத்தில்தான் #சஸ்னாவின் வீட்டருகே குடியேறி 3 பிள்ளைகளின் 35 வயது தாயுடன் காதலில் வீழ்ந்தான்.

இப்போது பள்ளிவாசல் நிர்வாகம் திருமணம் செய்துவைக்க மறுத்தது, மறுபுறம் வெளிநாட்டில் இருக்கும் சஸ்னாவின் கணவரும் இவளை மீண்டும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

சஸ்னாவின் குடும்பம் இப்போது ரெண்டும்கெட்டான் நிலைக்கு ஆளானது.

சஸ்னா அழுதாள், ரிஸ்வான் இல்லை என்றால் என் உயிர் விடுவேன் என்றாள், ரிஸ்வானும் அதே நிலைப்பாட்டில் இருந்து சற்று கீழிறங்கினான்.

காரணம் ஊரார், குடும்பம், நண்பர்கள் என எல்லோரும் புத்திக்குமேல் புத்தி புகட்டினார்கள், மாட்டிக்கொள்ள வேண்டாமென எச்சரித்தனர்.

இறுதியாக அவன் பின் வாங்கினான்.

சஸ்னா இப்போது நடுரோட்டில் விடப்பட்டவளாய் நின்றாள்.

எனினும் சஸ்னாவின் தாய் இவளை பொறுப்பேற்க முன்வந்தார்.

இந்நிலையில் சஸ்னாவின் கணவர் வெளிநாட்டிலிருந்து அவசரமாக நாடு திரும்பி சஸ்னாவின் வீட்டில் இருந்த தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தன் தாயிடம் ஒப்படைத்தார்.

இனிமேள் சஸ்னா தேவையில்லை.
இனிமேல் பிள்ளைகளே என் உலகம், அவர்களே என் எதிர்காலம் என்ற முடிவுடன் அவர்களுக்கு துணையாக நின்றார்.

விவாகரத்திற்கு விண்ணப்பித்தார்.

அறிந்து கொள்ளுங்கள்! 👇👇👇

மாதா மாதம் வீட்டுக்கு போதுமான பணம் அனுப்புவதோ, பொருட்கள் அனுப்புவதோ, குறை எதுவுமின்றி மனைவி பிள்ளைகளை பராமரிக்கிறோம் என்பது #மட்டுமோ நிம்மதியை தராது நிறைவையும் தராது.

அப்படியானால் மனைவிக்கு பக்கதிலேயே உட்கார்ந்து பராமரிக்க வேண்டும் பாசம் பொழிய வேண்டுமென்றா சொல்கின்றீர்கள் என்று யாரும் கேட்கலாம்.

மனைவி பிள்ளைகளுக்கு நீங்கள் எதை எதையெல்லாம் அள்ளி அள்ளி இறைத்து நிறைவான வசதி செய்து கொடுத்த போதிலும் சரி, பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்ட போதிலும் சரி, பாசம் பொழிந்து நேசம் பொழிந்து தினம் தினம் சுகம் கொடுத்த போதிலும் சரியேதான்…

அணுவளவேனும் உறுதியான #இறையச்சத்தை நீங்கள் கொடுக்காதவரை, உள்ளத்தில் அதை ஊட்டாதவரை…

வீட்டை சுற்றி ஆயிரம் CCTV கமெராக்கள் பூட்டினாலும், பெட்டிக்கணக்கில் வெளிநாட்டிலிருந்து பொருட்களும், பணமும் அள்ளி அள்ளி அனுப்பினாலும் சரியே…

மேலே ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான், இடது பக்கமும், வலது பக்கமும் இருவர் நம்மை கண்காணித்து எழுதிக்கொண்டிருக்கின்றனர் என்ற #இறையச்சம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் வராதவரைக்கும்..

ஷைத்தான்❌ நம் அருகில் வந்து குடியமர்வான், குடும்பத்தையே குலைப்பான்.

நீங்கள் நெஞ்சோடு நெஞ்சணைத்து அருகில் உறங்கி கொண்டிருந்தாலும் சரியே, அங்கு இறையச்சம் இல்லை என்றால் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் மாறு செய்வது ஒன்றும் மலைபிளக்கும் காரியமல்ல.

அது போன் மூலமாகவும் நடக்கலாம், நேரிலும் நிகழலாம்!

இறையச்சத்தை ஊட்டுங்கள் நீங்கள் எங்கிருந்த போதும், எவருடன் இருந்த போதும் அது கணவனோ , மனைவியோ கண்ணியமாக காப்பாற்றப்படுவீர்கள்.

அல்லாஹ் பாதுகாப்பான்.

இல்லையெனில் ஷைத்தான் உங்களுக்கு நண்பனாக சாட்டப்படுவான்.👇👇

وَمَنْ يَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَيِّضْ لَهٗ شَيْطٰنًا فَهُوَ لَهٗ قَرِيْنٌ‏
எவன் ரஹ்மானுடைய நல்லுபதேசத்திலிருந்து கண்ணை மூடிக்கொள்கிறானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை (நண்பனாகச்) சாட்டிவிடுவோம். அவன் அவனுக்கு இணைபிரியாத தோழனாகி விடுகிறான்.
(அல்குர்ஆன்: 43:36)

“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன். எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.
(அல்குர்ஆன்: 4:119)

உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(குர்ஆன் 49:13)

“அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “அவர்களில் இறையச்சம் உடையவரே” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி-3490 , 3353

“நபி (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையில் ‘இறைவா! நான் உன்னிடம் நேர்வழி, இறையச்சம், பத்தினித்தனம், போதும் என்ற மனம் ஆகியவற்றை கேட்கிறேன்’ என இவ்வாறு கூறுவார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), முஸ்லிம்)

மற்றுமொரு படிப்பினை தரும் உண்மை சம்பவத்துடன் உங்களை சந்திக்கும் வரை…

தருவது – அல்மசூறா

இது போன்ற மேலும் பல உண்மை சம்பவங்களை பார்வையிட எங்களுடைய ” WhatsApp Group ” யில் இணைந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *